Thursday, 27 March 2014

கம்பனோடு கலந்த கணங்கள் . . . . . . .(1)

கம்பனுடைய அழகிய கவிதையின் வனப்பே காட்சிகளை விபரிக்கும் அந்த ழகிய வர்ணணை நடைகளே !

கட்டுக்கதையென்பார் சிலர், இதிகசமென்பார் மற்றும் சிலர் எது எப்படி இருப்பினும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு பல உதாரணக்களை உகுத்துக் காட்டும் ஒரு அற்புதப் படைப்பே இராமாயணம்.


அதுவும் கம்பனது கவிதைச் செறிவும் தமிழ் மொழியழகும் அப்படைப்பினை அப்படியே உறிஞ்சிக்குடிக்கும் அளவிற்கு எம்மை உணர்வினுக்குள் உட்புகுத்தி விடுகிறது.


இதோ கம்பனது கவிக்கானகத்தினுள் நான் நுழைந்த வேளை அதோ யாரது அங்கே மெல்லெனென நடந்து செல்கிறார்கள் ?



! ராமரும், சீதையும் தம்பி இலக்குவனின் துணையோடு அக்கானகத்தின் அழகிய பாகம் ஒன்றினுக்குள் நுழைகின்றார்களோ ?

ஓ அந்த வேளையின் அழகினை, அப்பகுதியின் காட்சியினை


 


கருமேகத்துள் புகுந்தததந்த வெண்ணிலவு
கார்மேகக் குழந்தையெனத் தவழும் மழை
கொண்ட அழகிய மலைச்சாரலது
மதியை கார்மேகத்துள் சூலாகக் கொண்ட
மந்தகாச வானமது இடியாக முழங்க
பாவம் அந்த ஆண்யானை தன்னினிய
பெண்யானையின் பிளிறலோ என்றெண்ணி
பன போலோங்கிய தும்பிக்கையை
நீட்டி எட்டுகிறதாமென்பார்
பாலை போன்று வெளிறிக் கிடந்த
தரையைக் கடந்து எம் கதை நாயகரும் நாயகியும்
ஆகி நின்ற இராமர், சீதை, இலக்குவன்
மெல்லெனவே நுழைந்த போதங்கு

சக்தி


இப்படி நான் விளங்கிக் கொள்ள வழி வகுத்த அந்த சொற்சிலம்பனின் அற்புதக் கவிக்கட்டு எதுவென்று பார்ப்போமா ?


வெளிறு நீங்கிய பாலையின் மெல்லெனப் போனார் -
 குளிறும் வான்மதிக் குழவி தன் சூல்வயிற்று ஒளிப்ப, 
பிளிறு மேகத்தைப் பிடியெனப் பெரும்பனைத் தடக்கைக்  
களிறு நீட்டும் அச் சித்திர கூடத்தைக் கண்டார். 

 கவிச்சக்கரவர்த்தி கம்பன்


உள்ளத்தில் ஓர் உவகை. என் அன்னைத் தமிழின் உன்னத மைந்தர்களினால் நெய்யப்பட்ட இலக்கியப் பட்டாடைகளை உடுத்திப் பார்க்கையில் ஒரு ஆனந்தம்.


ஆமாம் இவ்வினிய வேளையில் எனது இதயம் ப்ருகிய ஆனந்த பாந்த்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேலும் பேரானந்தம்.


மீண்டும் அடுத்தொரு தேன் துளியுடன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்